மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கூட்டுக் கடிதம்: உங்கள் அடிமைகளா? என இம்ரான் கான் கண்டனம்…!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ந்தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்து வந்த போதிலும், போரை நிறுத்த முடியவில்லை. உக்ரைன் தனி ஒரு நாடாக நின்று சமாளித்து வருகிறது.
போர் நடந்து கொண்டிருக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடியது. அப்போது ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன. இந்த தீர்மானங்கள் தோல்வியடைந்தன. இந்தியா, பாகிஸ்தான் வாக்கெடுப்பை புறக்கணித்தன.
வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் கடந்த 1-ந்தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள வடக்கு நாடுகளில் தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் ஐ.நா. வாக்கெடுப்பின்போது பாகிஸ்தான் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தக் கடித விவகாரம் தற்போது வெளிவந்துள்து. இதுகுறித்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாங்கள் அவர்களின் அடிமைகளா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. நாம் அவர்களுடைய அடிமைகளா? அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதை செய்யனுமா?.
ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு இதுபோன்று கடிதம் எழுதினார்களா?’’ என்றார்.
மேலும், நாங்கள் ரஷியாவுடன் நட்பாக இருக்கிறோம். மேலும் அமெரிக்காவுடனும் நட்டபாக இருக்கிறோம். சீனா, ஐரோப்பா நாடுகளுடனும் நட்டபாக இருக்கிறோம். ஆனால், எந்த முகாமிலும் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேற்கு நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. அதனால் நன்றி கிடைப்பதற்குப் பதிலாக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.