’மலையக மக்களுக்கு மாத்திரம் ஏன் வேறொரு சட்டம்?’
பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஒரே நாடு, ஒரே சட்டம் என்றால் மலையக மக்களுக்கு மாத்திரம் ஏன் வேறொரு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார்.
தொழில் அமைச்சரும் மலையகத்தைச் சேர்ந்தவர் என்றவகையில், அவரது காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று (10) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், மலையக தொழிலாளர்கள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பெருந்தோட்டக் கம்பனிகளால் தொழில் அமைச்சருக்கு பெரும் கரும்புள்ளி விழுந்துள்ளது. தொழில் அமைச்சருக்கு எதிராக கம்பனிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதுபோன்று வேறெங்கும் நடக்காது. ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளபோதிலும் அது தொடர்பான வழக்கு நீதிமன்றில் உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த ஒரு வருடத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனை ஏன் தொழில் அமைச்சர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.
மலையக மக்களின் காணி உரிமை தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் வழக்கைக் காட்டிக்கொண்டு தொழிலாளர்களின் நலன்புரி சேவைகள் சூரையாடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே சட்டம் என்றால் மலையக மக்களுக்கு மாத்திரம் ஏன் வேறொரு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார்.