;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதிக்க முடியாது!!

0

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்று கடந்த 11ஆம் திகதி கச்சதீவில் நடைபெற்றது.

இதில் நாம் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மட்டுமே போராடி வருகின்றோம். ஆனால் அதை, இந்திய தொப்புள் கொடி உறவுகளுக்கு எதிரான போராட்டமாக சிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் கதைத்து வருகின்றனர்.

நாம் அங்கே தெளிவாக கூறினோம், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆண்டு வரை வடக்கு மக்களுக்கு, இந்திய உறவுகள் செய்த உதவிகளை நாம் மறக்க மாட்டோம். ஆனால் ஒரு நிமிடம் கூட இலங்கை கடல் பரப்புக்குள் இழுவை மடித்தொழிலை செய்ய அனுமதிக்க மாட்டோம்.

நாட்டுப்படகோ, இழுவை மடிப்படகோ எதுவாக இருந்தாலும் எமது நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி வரும் பொழுது சட்டம் தன் கடமையை செய்யும். இந்திய மீனவர்கள் இழுவை மடி தொழிலை நிறுத்தினால் உங்கள் தரப்பிலுள்ள நியாமான கோரிக்கைகளை நாம் வெளியுறவு அமைச்சின் ஊடாக ஆராய்வோம் என கூறியிருந்தோம்.

அதேவேளை இந்திய நாட்டுப் படகு தொழிலாளர்கள், இழுவை மடித் தொழிலால் தாமும் பாதிக்கப்படுவதாக. அதற்கு எதிராக தாமும் செயற்படுவோம். என்றும் தமது பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் மட்டம் வரை கொண்டு சென்றும் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும் கூறியிருந்தார்கள். அத்துடன் எமது பிரச்சினையை அவர்கள் 90 வீதம் ஏற்றுக்கொண்டார்கள்.

இலங்கை மற்றும் இந்திய பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டாக இணைந்து இலங்கை இந்திய கடல் வளத்தை பாதுகாக்கவும் தீர்மானித்துள்ளோம் – என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.