யாழில் விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை!!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையிலிருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், விவசாயத்துக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசலை எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று(15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விற்பனை நிலையங்களில் போத்தல்களில் மண்ணெண்ணை மற்றும் டீசலை கொள்வனவு செய்யும் சிலர் அதனை கறுப்பு சந்தையில் கூடிய விலையில் விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து, டிரக்டர்கள், விவசாய உபகரணங்களை எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு கொண்டுசென்று எரிபொருளை கொள்வனவு செய்யவேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் இக்கூட்டத்தில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதேச கமநல சேவைகள் நிலையத்தினூடாக சேகரிக்கப்படும் விவசாயிகளது பெயர் விபர பட்டியல், அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய பணிப்பாளரின் ஒப்புதலுடன் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் தமக்கு தேவையான மண்ணெண்ணை, டீசலை கொள்கலன்களில்,போத்தல்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலையிலும் விவசாயத்துக்கு தேவையான எரிபொருள் கையிருப்பை தொடர்ந்தும் பேணுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”