உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் சந்தைக்கு…!!
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், எதிர் காலத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து சேலைன் (Saline) போத்தல்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அத்துடன், வருடாந்தம் 26 மில்லியன் சேலைன் (Saline) போத்தல்கள் தேவைப்படுகின்றன. இவற்றை கெலூன் லைப் சயன்ஸ் நிறுவனம் (Kelun Life Science pvt ltd) உற்பத்தி செய்கின்றது. அமைச்சரவையின் அனுமதியுடன், உள்நாட்டில் சேலைன் (Saline) போத்தல்களை விற்பனை செய்யும் முழு உரிமையையும் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு பொருளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது பெரும் சாதனையாகும் என்றும் அவர் மேலும் குறிப்பட்டுள்ளார்.