சாரதி ஆசனத்தில் ‘அவ்வாறானவரை’ அமரச் செய்தது சரியா?
எமது நாட்டில் மட்டுமன்றி, உலகநாடுகளில் இடம்பெறும் பாரிய விபத்துகளில் பெரும்பாலானவை சாரதியின் தவறால் இடம்பெற்றிருக்கும். எனினும், சாரதியின் மீது நேரடியாக குற்றஞ்சுமத்தாது, வாகனங்கள், வீதிகள், இயற்கை ஆகியவற்றின் மீது குற்றஞ்சுமத்தித் தப்பித்துக்கொள்வர். சில சந்தர்ப்பங்களில் எதிரே வந்த வாகனத்தின் மீதும் கையை நீட்டுவர். சிலவேளைகளில் அது உண்மையாகியும் விடும்.
சொந்தமாக வாகனத்தை வாங்கி பயில்வோரும் உள்ளனர், சாரதி பயிற்சி பாடசாலைக்குச் சென்று பயின்றவர்களும் இருப்பர். முறையான அனுமதிப்பத்திரம் இருக்காவிடினும், வாகனத்தைத் திறம்படச் செலுத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். எனினும், ஒருவரைப் பலவந்தப்படுத்தி சாரதி ஆசனத்தில் அமரச்செய்தால், கட்டாயமாக விபத்து நடந்தே தீரும்.
அவ்வாறான விபத்துக்கள் அரசியலில் அதிகம். “உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன்” என்ற கூற்று, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரை, சாரதி ஆசனத்தில் அமரச்செய்தமையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தவறைச் செய்தவர்கள் எதிர்காலங்களில் தெளிவாக இருக்கவேண்டும். இல்லையேல் மீண்டும், மீண்டும் பாரிய விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு நேற்றுமுன்தினம் (16) ஆற்றிய உரையின் சாரம்சத்தை பார்க்குமிடத்து, ஜனாதிபதித் தேர்தலில் விருப்பமின்றி இருந்தேன், நீங்கள்தான் என்னை பலவந்தமாக அழைத்துவந்துவிட்டீர்கள், ஆனாலும், நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பேன், நெருக்கடிக்கு நான், பொறுப்பல்ல எனக் கூறி நழுவிச்செல்வதாய் உள்ளது.
நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறான தருணத்தில், நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில், ஒரு யதார்த்தம், அர்த்தபுருஷ்டி, அடுத்தகட்ட நகர்வுக்கான யோசனைகள், என்பவற்றை அச்சொட்டாக அடித்துக் கூறியிருக்கவேண்டும்.
அப்படி இருந்திருந்தால், துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற மக்கள், இன்னும் பொறுமையைக் கடைப்பிடித்து, பயணத்துக்கு ஆதரவை நல்கியிருப்பர். எனினும், கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்து, “தேசிய பொருளாதார சபையை” கோடிட்டுக் காட்டியுள்ளார். எனினும், அதற்கான ஆலோசனைக் குழுவில் இருப்போரில் சிலர், பெரும் வர்த்தகம் செய்பவர்கள். அவ்வாறானவர்கள் எப்படி, சுதந்திரமான ஆலோசனைகளை வழங்குவர்.
ஜனாதிபதி கடந்த காலங்களில் எடுத்த கடுமையான முடிவுகள், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. அரசாங்கத்தை விமர்சித்தவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனால், அரசாங்கத்துக்குள்ளே இருந்துகொண்டு இன்னும் பலரும் பகிரங்கமாகவே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இங்கு, “கூட்டுப்பொறுப்பு” அப்பட்டமாகவே மீறப்படுகிறது.
நிறைவேற்று அதிகாரம் கையில் இருப்பதால், அதிரடியான முடிவுகளை எடுக்கலாம். எனினும், நழுவல் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கின்றது. நெருக்கடியை சமாளித்து முன்னரக வேண்டும். அனைத்து சுமைகளையும் மக்களின் மீது திணித்துவிடக்கூடாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமின்றி, பிரிதொரு அரசாங்கம் ஆட்சி பீடத்தில் இருந்திருந்தாலும் முன்னைய அரசாங்கத்தையே விமர்சனம் செய்துகொண்டிருப்பர் என்பதை கவனத்திற்கொண்டு, இந்த நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டெழுவதற்கு தனியனாகச் செல்லாது, கூட்டாக செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவேண்டும். இல்லையேல் மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு அழுது, புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது.