மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்- காங்கிரஸ் குற்றச்சாட்டு…!!
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு கும்பல் வீடுகளுக்குத் தீ வைத்தது. இதில் எட்டு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். மாநிலத்தில் நடைபெறும் அரசியல் கொலைகள் கவலை அளிக்கின்றன. கடந்த மாதத்தில் மாநிலத்தில் 26 அரசியல் கொலைகள் நடந்துள்ளன என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தேர்தல் வன்முறை மற்றும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் பல உயிர்களைக் கொன்றுள்ளன. முழு மாநிலமும் அச்சம் மற்றும் வன்முறையின் பிடியில் உள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவை அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. மாநிலத்தில் அரசியல் சாசன இயந்திரம் சீர்குலைந்திருப்பது குறித்து தேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தீவிரமான விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 355 வது பிரிவைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வன்முறை நடைபெற்ற பிர்பூம் பகுதிக்கு இன்று செல்லும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அங்குள்ள நிலைமை குறித்த அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்தில் சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பீர்பூம் வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.