உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு…!!
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி வருகிறார்.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு மோடி தனது முதல் மன் கி பாத் உரையை இன்று நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இது இந்தியாவின் திறன்களையும் ஆற்றலையும் குறிக்கிறது. உலகில் இந்தியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது என்பதே இதன் அர்த்தம்.
முன்பெல்லாம் பெரிய நபர்கள் மட்டுமே அரசாங்கத்திற்கு பொருட்களை விற்க முடியும் என்று நம்பப்பட்டது ஆனால் தற்போது இ-மார்க்கெட் பிளேஸ் போர்டல் இதை மாற்றியுள்ளது, இது புதிய இந்தியாவின் உணர்வை காட்டுகிறது.
இன்று, நமது சிறு தொழில் முனைவோர் அரசு இ-மார்க்கெட் பிளேஸ் மூலம் கொள்முதல் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி மற்றும் எழுச்சி ஊக்கமளிக்கும் விதங்களில் ஒன்றாக உள்ளது.
சமீபத்தில் வழங்கப்பட்ட பத்ம விருதுகள் நிகழ்ச்சியில் பாபா சிவானந்தாவைப் பார்த்திருப்பீர்கள், அவருடைய வீரியம் மற்றும் உடற்தகுதியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அவரது உடல்நிலை விவாதப் பொருளாக உள்ளது. அவருக்கு யோகாவில் ஆர்வம் உண்டு. இவ்வாறு பிரதமர் தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.