கோவில் விழாவுக்கு வந்த யானைக்கு மதம் பிடித்து மதில் சுவரை இடித்து தள்ளியது…!!
கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்களில் சாமி ஊர்வலத்திற்கு யானைகள் பயன்படுத்தப்படும்.
யானைகள் மீது தான் சாமி ஊர்வலமே நடைபெறும். இதற்காக கொச்சியை அடுத்த சேரநல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது.
நேற்று பிற்பகல் கோவிக்கு வந்த யானை கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.
கொட்டகை இல்லாததால் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த யானைக்கு நேற்று மாலை திடீரென மதம் பிடித்தது. இதனால் யானை அங்கிருந்த பொருள்களை மிதித்து, தூக்கி வீசியது. உடனே பாகன்கள், யானை கோவிலை விட்டு வெளியேறாமல் இருக்க கோவிலின் முன்பக்க வாசலை அடைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த யானை, கோவிலின் பக்கவாட்டு சுவரை இடித்தது. மேலும் அங்கிருந்த பந்தலையும், மின்சாதன பொருள்களையும் துவம்சம் செய்தது.
இதனை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மயக்க மருந்து செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்பு யானைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கேரளாவில் வெயில் கொளுத்துவதால் யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.