மோட்டார் வண்டி விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறை!! (படங்கள், வீடியோ)
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.
30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும்
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார்.
இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை கழற்றும் போது மோட்டார் வாகனம் நின்றுவிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொறிமுறையில் சில பின்னடைவுகள் காணப்பட்டாலும் கூட இவ்வாறான ஒரு முன்மாதிரியான முயற்சியை வரவேற்பது அவசியமாகும்.
அந்த வகையில் இந்த பொறிமுறையை வடிவமைத்த எட்வின் மொரிஸை நாம் தொடர்பு கொண்டபோது, தலைக்கவசம் போடாமல் ஏற்படுகின்ற மோட்டார் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக தான் இதனை ஐந்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்ததாகவும் தற்போது இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.
அதேவேளை ஏனைய மோட்டார் வாகனங்களுக்கும் இந்த பொறிமுறையை செய்யும்பொழுது ஓரளவிற்கு மோட்டார் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”