பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த தெரண ஊடகவியலாளர்கள்!!
ஜனாதிபதியின் இல்லதிற்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக அத தெரண மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில், போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் போது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டனர்.
இதில், அத தெரண கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர் நிஸ்ஸங்க வேரபிட்டிய காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று பிற்பகல் நிஸ்ஸங்க வெரபிட்டியவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அத தெரண ஊடகவியலாளர் சுமேத சஞ்சீவ, சம்பவ இடத்திலேயே பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் கெமராவுடன் மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று காலை பொலிஸ் பஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது அவரது முகம் மற்றும் உடலில் வெட்டுக் காயங்களை காணக்கூடியதாக இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பொலிஸ் பஸ்ஸுக்குள் பிரவேசித்து சுமேத சஞ்சீவவுடன் கலந்துரையாட முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர்களால் இடையூறு ஏற்பட்டது.
இதேவேளை, போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் போது பொலிஸாரின் தாக்குதலில் அத தெரண நுகேகொட பிராந்திய ஊடகவியலாளர் பிரதீப் விக்கிரமசிங்கவும் காயமடைந்துள்ளார்.
அதேபோல், அத தெரண சார்பில் சம்பவ இடத்திற்குச் சென்ற முதலாவது ஊடகவியலாளர் லஹிரு சாமர என்பதுடன் அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், சிரச நியூஸ் ஃபர்ஸ்ட் ஊடகவியலாளர் அவங்க குமார, ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற போது, பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.
இதேவேளை, போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் ஏற்பாடு செய்திருந்தனர்.