அம்மா தூய்மை பணியாளர்; மகன் சிறப்பு விருந்தினர் !!
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட `லாப் சிங் உகோக்` என்பவர், தனது தாய் தூய்மை பணியாளராக பணிபுரியும் அதே பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று முதன்முறை ஆட்சியை பிடித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
குறிப்பாக மொத்தமாக உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்தது.
இக் கட்சியின் சார்பில் பாதவுர் தொகுதியில் போட்டியிட்டவர் லாப் சிங் உகோக் 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இவரது தாயாரான பல்தேவ் கவுர் என்பவர் அருகில் உள்ள அரச பாடசாலையில் சுகாதாரப் பணியாளராக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இதனையடுத்து தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்றாலும் தூய்மை பணியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த பல்தேவ் கவுர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”எனது மகன் தேர்தலில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.. நாங்கள் எப்போதும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். என்னுடைய மகன் MLA-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் பாடசாலையில் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது தாய் .பல்தேவ் கவுர் தூய்மை பணியாளராக இருக்கும் அதே பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.