பாரம்பரிய மருத்துவத்திற்கு முதலீடுகள் தேவை- ஆயுஷ் மந்திரி..!!
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு குஜராத்தில் ஏப்ரல் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய ஆயுஷ் அமைச்சகம், குஜராத் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் மற்றும் உலக சுகாதார மையத்தின் பொது இயக்குநர் மருத்துவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மத்திய ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறியதாவது:-
பெருந்தொற்றுக்கு பிறகு மக்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தின் மீதான கூட்டு நம்பிக்கை அதிகரித்துள்ளது. உலகில் பல நாடுகளில் பெரும்பாலான மக்கள் பாரம்பரிய மருத்துவத்தையே முதல் சிகிச்சை முறையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவத்தை மேலும் விரிவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வரவும் முதலீடு தேவைப்படுகிறது. இந்த மாநாட்டின் நோக்கம் முதலீட்டாளர்கள், சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் சர்வதேச, தேசிய பங்குதாரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த துறையின் வளர்ச்சி மற்றும் பயன் ஆகியவற்றை விளக்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகம் இந்த துறையின் முன்னேற்றத்தை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் தொழில்முனைவோர் இந்த துறையில் கவனம் செலுத்துவதற்கு இதில் உள்ள வாய்ப்புகளையும் விளக்குகிறது.
ஏற்கனவே இந்திய மருத்துவ முறை உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறையான ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட மருத்துவமுறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தற்போது உலக அளவில் சிறந்த மருத்துவத்தை வழங்கி, மாற்றத்தை ஏற்படுத்த இந்த மருத்துவமுறையை இந்தியாவிற்கு வெளியிலும் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இவ்வாறு ஆயுஷ் மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.