கர்நாடகத்தில் மே 16-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு..!!
சீனாவில் உருவான கொரோனா கொடிய வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வீடுகளில் முடங்கினர். இந்த கொரோனா வைரசை இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது முதல், 2-வது, 3-வது அலைகள் முடிந்து தற்போது 4-வது அலைக்கு தயாராகி விட்டது. இந்த கொரோனாவால் பள்ளி-கல்லூரிகள் மாணவ, மாணவிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் பெரிய அளவில் செயல்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகளின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தாலும் அது பெயரளவுக்கு தான் நடக்கிறது என்றும், மாணவ-மாணவிகளிடம் கற்றல் திறன் அதிகரிக்கவில்லை எனவும் தெரிகிறது.
இந்த கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நடக்கிறது. ஆனால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கின்றன.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் பழையபடி செயல்பட தொடங்கி உள்ளன. மாணவ-மாணவிகளும் எந்தவித பயமும் இன்றி பழையபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு கிடந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் நடப்பு கல்வியாண்டில் (2022-23) பள்ளி-கல்லூரிகளை முன்கூட்டியே திறக்க கர்நாடக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. அதாவது மே மாதம் 16-ந்தேதி பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரிகள் திறக்கப்படும். முதல் பருவ வகுப்புகள் அக்டோபர் 2-ந்தேதி வரை நடைபெறும். 2-வது பருவ வகுப்புகள் அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை நடக்கும். வருகிற கல்வி ஆண்டில் தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை இருக்கும். கோடை விடுமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே மாதம் 28-ந் தேதி வரை இருக்கும்.
இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 60 அரசு விடுமுறை நாட்கள் வருகின்றன. 256 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். அரசு பள்ளி-கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வருகிற மே மாதம் 16-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடைபெறும். கொரோனா பரவலால் பள்ளிகளை மூடப்பட்டால் டிஜிட்டல் வழியாக கல்வி கற்பிக்கப்படும். எக்காரணம் கொண்டும் குழந்தைகள் கற்றலில் இருந்து பாதிக்கப்படக்கூடாது.
குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி, கர்நாடக ராஜ்யோத்சவா ஆகியவற்றை பள்ளி-கல்லூரிகளில் கட்டாயம் கொண்டாட வேண்டும். வேலை நிறுத்தம் உள்ளிட்டவற்றால் வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றால், வேறு விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தி அதை ஈடுசெய்ய வேண்டும்.
கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்தந்த பள்ளி நிர்வாகங்கள், பள்ளி கட்டிடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அங்கு தேவையான வசதிகளை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தான் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-22-ம் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டு இருந்தன.
டிஜிட்டல் வழியாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. அதனால் வருகிற கல்வி ஆண்டு 15 நாட்கள் முன்கூட்டியே தொடங்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.