தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மோசடி அதிகம் நடக்கிறது: அஜித்பவார்..!!
புனே மாவட்ட நகர்புற கூட்டுறவு வங்கியின் நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் பேச்சுக்கள் நடக்கின்றன. இதன் காரணமாக வங்கி துறையில் காலியிடம் உருவாகும். அதை கூட்டுறவு வங்கிகளால் நிரப்ப முடியும். கூட்டுறவு வங்கிகளில் ஏதாவது சிறிய தவறு நடந்தால், கூட்டுறவு அமைப்புகளே மோசடியில் ஈடுபடுகின்றன என மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்த துறை களங்கப்படுத்தப்படுகிறது.
கடந்த 2018-19-ம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.64 ஆயிரத்து 509 கோடி மோசடி தொடர்பாக 3 ஆயிரத்து 766 முறைகேடு வழக்குகள் பதிவாகி உள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி அளவில் தான் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இதில் நகர்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.127 மோசடி தொடர்பாக 118 முறைகேடுகள் பதிவாகி உள்ளது.
கூட்டுறவு வங்கிகளை விட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் அதிகளவில் மோசடி நடந்து உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த பிரசாரமோ, கூக்குரலோ அல்லது கூப்பாடோ எழுப்பப்படவில்லை. அதே நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் வெளிப்படை தன்மை, வேலை, மக்கள் நல கொள்கைகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். சிறிய அளவில் நடந்தாலும் மோசடி ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.