காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் திடீர் மறுப்பு..!!
காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்து விட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
‘பிரசாந்த் கிஷோருடனான தேர்தல் வியூக விளக்கக் காட்சி மற்றும் ஆலோசனைகளைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை கட்சியின் தலைவர் உருவாக்கினார். அந்த குழுவின் ஒரு பகுதியாக, பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை பாராட்டுகிறோம்’ என ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியை சரிவில் இருந்து மீட்டெடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்வது தொடர்பான வரைவு திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கினார்.
அதன்பின்னர் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்க்க கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், காங்கிரசில் இணையும் விருப்பத்தை பிரசாந்த் கிஷோர் கைவிட்டுள்ளார்.