வடகொரியாவின் அணு ஆயுத திறன் வலுப்படுத்தப்படும்: கிம் ஜாங் அன் சூளுரை..!!
வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் அணு ஆயுதம் ஒன்றை சோதிக்கலாம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் வடகொரியா ராணுவம் நிறுவப்பட்டதின் 90-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் பியாங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட வடகொரியாவின் ராணுவ பலத்தை உலகுக்கு காட்டும் ஏராளமான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் இந்த விழாவில் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர், “நமது நாட்டின் அணு ஆயுத திறன்களை அதிகபட்ச வேகத்தில் வலுப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். நமது அணுசக்தி படைகளின் அடிப்படை நோக்கம் போரைத் தடுப்பதுதான், ஆனால் நமது நிலத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டால், நமது அணுசக்திப் படைகளை போரைத் தடுக்கும் ஒற்றை பணியோடு நிறுத்திவிட முடியாது. எனவே நம்முடைய அணு ஆயுதங்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்” என கூறினார்.