கோப் குழுவில் வௌியான உண்மை!!
அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய் (1,496,155,864) ஈட்டியிருந்தாலும், 100 மில்லியன் ரூபாய் மாத்திரமே அரச திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் கோப் குழு விசேட கவனம் செலுத்தியது. இதன்போது கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், அரச நிறுவனங்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை அரச திறைசேரிக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரச மரக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அதன் செயற்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக அண்மையில் (22) கோப் குழு கூடிய போதே குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கண்டி வெலிகம்பொல ஹைன்போர்ட் தோட்டத்தில் இருந்து அகற்றுவதற்காக 28,958 பைன் மரங்கள் 2020 ஜூன் 30 ஆம் திகதி வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அரச மரக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் இதுவரை அந்த மரங்கள் அகற்றப்படவில்லை என்பது தொடர்பில் கோப் குழு கவனம் செலுத்தியது. இவ்வாறு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அகற்றுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மரங்களை செயற்திறனாக அகற்றி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமானால் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்துக்கு பாரிய இலாபம் ஈட்ட முடியும் என குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்படும் மரங்களுக்கு சான்றிதழொன்றை வழங்க அரச மரக் கூட்டுத்தாபனத்துக்கு அதிகாரமளிக்கும் வகையில் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்த நடவடிக்கை எடுக்குமாறு 2012 ஒக்டோபர் 10 இல் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அறிவித்திருந்தாலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது. அதற்குப் பணிப்பாளர் சபை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மரக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயன்முறை 2012 முதல் இதுவரை தாமதமாவது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
14.4 மில்லியன் ரூபாய் கடனாளிகளை திறைசேரியின் அனுமதியின்றி தள்ளுபடி செய்தமை தொடர்பில் கோப் குழு வினவியது. நிறுவன கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் அனுமதியைப் பெற்று 2007 இல் அப்போதைய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது கோப் குழுவின் தலைவர் தெரிவிக்கையில், அரசாங்கக் கடன்கள் தொடர்பான ஒருங்கிணைந்த நிதிக்கு திறைசேரியின் செயலாளரே பொறுப்பாக இருப்பதால், அவ்வாறு கடனாளிகளை தள்ளுபடிசெய்வதாயின் அது தொடர்பில் பிரதான கணக்காளரினால் திறைசேரியின் செயலாளருக்கு அறிவித்து அனுமதி பெறவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கல்தமுல்ல தளபாடத் தொழிற்சாலையில் நிலவும் நட்டத்தை இலாபமாக மாற்றுவதற்கு 2012 இல் இடம்பெற்ற கோப் குழுவினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும், இது இன்னமும் நட்டமடைந்த நிலையில் இருப்பது தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.
இவ்வாறான நட்டத்தில் இந்த நிறுவனத்தை நடத்திச் செல்வதன் அவசியம் என்ன என கோப் குழுவின் தலைவர் வினவினார். பொதுவாக எடுத்துக்கொண்டால் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் பாரிய நாட்டம் ஏற்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார். இதன்போது கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிடுகையில், தளபாடங்கள் தயாரிக்கும் போது பாரியளவிலான மரங்கள் விரயம் இடம்பெறுவது இதற்கான காரணமாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அகற்றப்படும் மரங்கள் மூலம் துணை உற்பத்திகளைத் தயாரிப்பதன் ஊடாக இந்த நட்டத்தை ஓரளவுக்குக் குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார். தளபாட உற்பத்தி தொடர்பில் போதிய அறிவுடைய பணியாளர்கள் இல்லை என்பதாலும் சந்தையில் தனியார் துறையினருடன் போட்டியிட வேண்டிய நிலை உள்ளதாலும் இந்த நிலைமைக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அரசாங்க மரக் கூட்டுத்தாபனமாக தளபாடங்கள் உற்பத்தி செய்யாமல் இருப்பது பாரிய குறையாகும் என்பதால் இதனை நடத்திச் செல்கின்றமை இங்கு புலப்பட்டது. உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
சுற்றுநிருப அறிவுறுத்தல்களை மீறி கூட்டுத்தாபனத்தின் தலைவரின் உதவிக்கு இரண்டு ஆலோசகர்களும் சாரதி ஒருவரும் பணிப்பாளர் சபையின் அனுமதியில் மாத்திரம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட ஆலோசகர்களுக்கு 2019 பெப்ரவரி 12 முதல் செப்டம்பர் 03 வரை நாளொன்றுக்கு 2,850 ரூபாய் விகிதம் 270 நாட்களுக்கு 769,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் திறைசேரியின் அனுமதியை கோரியிருந்தாலும் அது கிடைக்கப்பெறவில்லை என்பதால் உரிய தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் செயலாளருக்கு அறிவித்தார்.
கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பூஸ்ஸ காட்சியறையில் இடம்பெற்ற விலைக்கழிவு கண்காட்சியில் 1,690,183 ரூபாய் பெறுமதியான பொருட்கள் 50 % ஐ விட விலை குறைத்து 707,710 ரூபாய்க்கு பரிந்துரை செய்ததால் 982,473 ரூபாய் நாட்டம் ஏற்பட்டமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. தளபாடங்கள் நீண்ட காலம் இருந்ததால் பழுதடைந்து காணப்பட்டதால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார். இவ்வாறு விலைக்கழிவு வழங்குவதை நியாயப்படுத்த முடியுமானால் அது தொடர்பில் பணிப்பளார் சபை பத்திரமொன்றைச் சமர்ப்பித்து கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ டி. சில்வா, இரான் விக்ரமரத்ன, சாகர காரியவசம், மதுர விதானகே, வன சீவரசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசங்க மரக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.