கோழிக்கோடு மாவட்டத்தில் மீண்டும் 2 சிறுமிகளுக்கு புதியவகை ஷிகெல்லா காய்ச்சல் பாதிப்பு..!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2020-ம் ஆண்டு ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அந்தக் குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 6 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கட்டுப்படு்த்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 மற்றும் 21ந் தேதிகளில் 2 சிறுமிகளுக்கு இந்த தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் இரு குழந்தைகளுக்கும் பெரிய அளவில் உடல்நலக்குறைவு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் 100 வீடுகளில் உள்ள கிணறுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிய சுகாதாரத்துறையும் கணக்கெடுப்பு நடத்தியது.
தடுப்பு நடவடிக்கைகளை டாக்டர் கே.வி மிதுன் சசி, தலைமையில் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வயிற்றுப்போக்கு தவிர, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை ஷிகெல்லா நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன. அசுத்தமான உணவை உண்பதிலிருந்தோ அல்லது பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நீரிலிருந்தோ தொற்று ஏற்படலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.