இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி- இந்திய தூதரகம் தகவல்..!!
சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். எனினும் இந்திய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தங்களது படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில்கொரோனா தாக்கம் குறைந்தால் சீனாவில் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை மீண்டும் நடத்தி வருகின்றன.
இதையடுதது இந்திய மாணவர்களும் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு செல்ல முடிவு செய்தனர். எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் என்ற பெயரில், விமான போக்குவரத்தை சீனா நிறுத்தி விட்டது.
இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கவும் அந்நாடு மறுத்து வருகிறது. இப்பிரச்சினையை சீன அரசின் கவனத்துக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
கடந்த மாதம் 25 ந் தேதி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்திய மாணவர்கள் சீனா திரும்புவது குறித்து பரிசீலிக்க சீன அரசு தரப்பு சம்மதம் தெரிவித்தது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மாணவர்கள் சீனா வருவதற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சீனாவுக்கு திரும்பிய மற்ற நாடுகளின் மாணவர்கள் பின்பற்றிய நடைமுறையையும், அனுபவத்தையும் இந்தியாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இந்திய மாணவர்கள் சீனாவுக்கு வருவதற்கான பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. எந்தெந்த மாணவர்கள் சீனாவுக்கு திரும்பவேண்டியவர்கள் என்ற பட்டியலை இந்தியா வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த மாணவர்களுக்கு நாங்கள் அனுமதி அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனாவுக்குத் திரும்ப விரும்பும் இந்திய மாணவர்கள், மே 8 ஆம் தேதிக்குள் மிஷன் இணையதளத்தில் கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான தகவல்களை வழங்க வேண்டும் என்று சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இந்திய தரப்பில் இருந்து சீனாவிற்கு தகவல்கள் பகிரப்பட்டவுடன், மாணவர்கள் பட்டியலைச் சரிபார்க்க தொடர்புடைய சீனத் துறையினர் கலந்தாலோசிப்பார்கள் என்றும், அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் படிப்பை முடிக்க சீனாவுக்குச் செல்வது குறித்து அனுமதி அளிக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.