டெல்லி பல்ஸ்வா குப்பை கிடங்கில் 5-வது நாளாக எரியும் தீ- நச்சுப்புகையால் மக்கள் திணறல்..!!
டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்துக் கிடந்த குப்பையில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. குப்பை கிடங்கில் இருந்து வெளிப்படும் தீப்பிழம்புகள் நச்சுக் காற்றை வெளியேற்றுவதால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீயினால் உருவாகும் நச்சுப் புகை வீடுகளுக்குள் நுழைவதால், அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் உடல்நிலையும் பாதிக்கப்படுவதாக குடியிருப்புவாசிகள் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் நச்சுப் புகை நுழைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் மே 4-ம் தேதி விளக்கமளிக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் டெல்லியின் வடக்கு நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, தீ விபத்து தொடர்பாக வடக்கு டெல்லி மாநகராட்சிக்கு டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.