பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி பாஜகவிற்கு விற்று விட்டார்- பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் புகார்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
மாயாவதியின் நடவடிக்கைகள் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் கொள்கைகளை கடுமையாகப் பாதித்துள்ளது. பகுஜன் சமாஜை மாயாவதி பாஜகவுக்கு விற்று விட்டார்.
தன்னையும், தன் சகோதரனையும், மற்ற உறவினர்களையும் காக்க, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவிடம் மாயாவதி சரணடைந்துள்ளார். தலித்துகளுக்கு அவர் செய்யும் துரோகத்தை, தானும் தனது அமைப்பும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
பலத்தால் மட்டுமே நாட்டின் பாசிச சக்திகளை தோற்கடிக்க முடியும். இதன் விளைவாக, நாட்டின் தலித்துகளை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தை பீம் ஆர்மி நடத்துகிறது.
பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் எப்போதும் தலித் சமூகத்தை ஒடுக்கவே பாடுபடுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, உத்தரபிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட்ட பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திர சேகர் ஆசாத், 4வது இடத்தை பிடித்ததுடன், டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.