;
Athirady Tamil News

மக்கள் ஆணையை இழந்துவிட்ட அரசாங்கம் !! (கட்டுரை)

0

முன் ஒருபோதும் இல்லாத வகையில், நாட்டில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி, நாட்டில் முன் ஒருபோதும் இல்லாத அரசியல் நெருக்கடியை தோற்றுவித்து உள்ளது. ஆட்சியாளர்கள் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று, பொதுமக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம், நாட்டில் இதற்கு முன்னர் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.

பொதுமக்களோடு சேர்ந்து எதிர்க்கட்சிகளும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரும் அதேவேளை, அரசாங்கத்தில் ஒரு சாராரும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்று கோருகின்றனர்.

மஹிந்தவால் அரசியலுக்குள் ஈர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் மஹிந்தவின் பெயரைக் கூறி அரசியலில் இடம் பிடித்துக் கொண்டவர்களும், இவ்வாறு கோருகின்றவர்களுடன் அடங்கியிருக்கிறார்கள்.

எந்த நிலையிலும் தாம் பதவி விலகப் போவதில்லை என மஹிந்த, கடந்த வாரம் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் கூறியிருந்தார். மக்கள் ஆணையைப் பெற்றே, தாம் பதவியில் இருப்பதாகவும் எனவே, தாம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றும் மஹிந்த கூறியிருந்தார்.

கோட்டாபய வெளிப்படையாக எதையும் கூறாவிட்டாலும், மக்கள் எவ்வளவு தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவரும் பதவியைத் துறக்கத் தயார் இல்லை என்றே தெரிகிறது.

கோட்டாபயவும் மஹிந்தவும் தேர்தல்களின் போது, மக்களின் வாக்கால் தெரிவு செய்யப்பட்டே பதவிகளில் உள்ளனர். எனவே, சட்ட ரீதியாகவும் மரபு ரீதியாகவும் மஹிந்தவின் வாதம் சரியென்றே பலரும் கூறுவர். அதேவேளை, இந்தத் தலைவர்களுக்கு வாக்களித்த மக்களில், இவர்களை வெளியேறுமாறு கூறுவோரின் எண்ணிக்கை அதிகமா, இன்னமும் ஆதரிப்போரின் எண்ணிக்கை அதிகமா என்று அளந்தறிய எவ்வித வழியும் இல்லை. அதற்காக அபிப்பிராய வாக்கெடுப்பொன்றைத் தான் நடத்த வேண்டியிருக்கும்.

எனவே, அவர்கள் பெற்ற மக்கள் ஆணை இன்னமும் இருக்கிறது என்று சிலர் வாதிடலாம். ஆயினும், இதேபோல் அதனை அளந்தறிய வழியில்லாமையால், இத்தலைவர்களை எதிர்ப்போரின் எண்ணிக்கையே அதிகம் என்று மற்றொருவர் வாதிடலாம்.

ஐம்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று மைத்திரிபாலவை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக அரியாசனத்தில் அமர்த்திய ஐ.தே.க, மூன்றாண்டுகளில் அதாவது 2018 ஆம் ஆண்டு, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது, தமது வாக்குவங்கியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்திருந்தது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக, பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த ஒருவரை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எண்ணிக்கையில் அரசாங்கத்தை எதிர்ப்போரே அதிகம் என்பது தெளிவான விடயமாகும். எனவே, மக்கள் ஆணை என்று கூறிக்கொண்டு, பிரதமரோ ஜனாதிபதியோ தொடர்ந்தும் பதவியில் தொற்றிக் கொண்டு இருக்க தார்மீக உரிமையில்லை.

இந்த விடயத்தில், பொது அறிவையும் மனச்சாட்சியையும் இழந்து, பிரதமர் கருத்து வெளியிடக் கூடாது. பொருளாதார நெருக்கடி, பாரிய அரசியல் நெருக்கடியாக மாறி, அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று மக்கள் நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆயிரக்கணக்காண இளைஞர்கள், யுவதிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பாவித்து, இரவு பகலாக, மூன்று வாரத்துக்கு மேலாக, தொடர்ச்சியாக ஆரப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த இடம் தற்போது நிரந்தர போராட்டக் களமாகிவிட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், தொழில்சார் நிபுணர்கள், மாணவர்கள், கலைஞர்கள், ஆதிவாசிகள் போன்ற சமூகத்தில் பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு செவிசாய்க்குமாறு பிரதான பிரவாகத்தின் ஊடகங்கள், ஆசிரியர் தலையங்கங்கள் மூலம் அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று அந்தந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். மாநாயக்க தேரர்களும் பிரதமரை நீக்கிவிட்டு எதிர்க்கட்சிகளோடு இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குமாறு கூறி வருகின்றனர்.

ஒரு காலத்தில் ஓர் அரசனைப் போல் இருந்த மஹிந்த, உயர்நீதிமன்றத்தின் கட்டளைகளையும் பகிரங்கமாகவே உதாசீனம் செய்தார். இப்போது அவரது அரசாங்கத்தின் கோரிக்கைகளை, சாதாரண நீதிவான் நீதிமன்றங்களே நிராகரித்து, ஆர்ப்பாட்டங்களை நடத்த இடமளித்து வருகின்றன. எனவே, பிரதமர் கூறும் மக்கள் ஆணையை, மக்களே மீளப் பெற்றுவிட்டார்கள்.

தாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் அதேவேளை, தமக்கும் தமது எதிர்கால சந்ததியினருக்கும் சுபிட்சமான வாழ்வையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் அளிப்பதற்காகவே, அரசியல்வாதிகளுக்கு தமது ஆணையை மக்கள் வழங்கி, அவர்களை ஆட்சியாளர்களாக்கின்றனர்.

அதாவது, மக்கள் ஆணை என்பது ஒரு பாரிய பொறுப்பாகும். அதனை நிறைவேற்றத் தம்மால் முடியாது என்பதை, அரசாங்கமே தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே, தமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, ஏனைய கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதி முயல்கிறார். ஆகவே, தேர்தலின் போது மக்கள் தமக்கு வழங்கிய ஆணை, தற்போது செல்லுபடி அற்றதாகிவிட்டதை ஜனாதிபதியும் பிரதமரும் உணர வேண்டும்.

மக்கள் ஆணை என்பது, வெறுமனே நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியின் ஆசன எண்ணிக்கை அல்ல. அது மீளப்பறிக்க முடியாத உரிமையும் அல்ல. அது ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கமோ செய்யத்தகாத செயல்களுக்கும் செய்யத் தவறும் நடவடிக்கைளுக்கும் பொறுப்பை ஏற்க வேண்டிய கடப்பாடு மிக்கது.

மக்கள் ஆணை என்பது, ஆட்சியாளர்களுக்கு எதையும் செய்வதற்கு வழங்கும் ஓர் உறுதிப்பத்திரம் அல்ல; அது நிபந்தனையற்றதுமல்ல. அது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜனாதிபதியோ பிரதமரோ, அவ்வாறு நினைத்து இதுவரை செயற்பட்டதாகக் கூற முடியுமா? ஓர் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயன்றும் அவை தீர்க்கப்படாவிட்டாலும், அந்த அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை செல்லுபடி அற்றதாகிவிடுகிறது.

ஏனெனில், அந்த அரசாங்கம் பொருத்தமற்ற உத்திகளை கையாண்டதாலேயே பிரச்சினைகள் தீரவில்லை. இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பார்க்கிலும் அடுத்துவரும் தேர்தல்களில், வெற்றிபெறுவதை மனதில் வைத்தும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கிலுமே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கம், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல், பெறுமதியான நாணய நோட்டுகளை அண்மையில் அச்சிட்டது. அதன் மூலம், நாட்டில் பணவீக்கம் வெகுவாக அதிகரித்தது. ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு மாதத்தில், அடுத்து வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, வர்த்தகர்களுக்கு வழங்கிய பாரிய வரிச் சலுகைகளே, அரச வருமானம் குறைந்து பணம் அச்சிடும் நிலைக்கு அரசாங்கத்தை தள்ளின. தற்போது வானளாவ உயரும் விலைவாசிக்கு அதுவும் பிரதான காரணமாகும்.

பின்னர், பசளைக்கு செலவாகும் வெளிநாட்டு செலாவணியை மீதப்படுத்திக் கொள்வதற்காகவும் சேதனப் பசளை மூலம் மட்டும் விவசாயம் செய்யும் நாடு என்ற பெயரை பெற்றுக் கொள்வதற்காகவும், ஒரு சில விடயம் அறியாத ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்டு, இரசாயன பசளை இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்தார். அதனால், நாட்டில் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போதைய உணவு விலை ஏற்றத்துக்கு அதுவும் ஒரு காரணமாகும்.

தமது கொள்ளைக்கார வர்த்தக மாபியாவை திருப்திப்படுத்தி, அவர்கள் மூலம் இலாபமடைய அரச தலைவர்கள் சீனிக்கான வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதம் வரை குறைத்தனர். ஆனால், வர்த்தகர்கள் சீனியின் விலையை குறைக்கவில்லை. அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இதன் காரணமாக, திறைசேரி 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது.

இவ்வாறு, ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டை சீரழித்ததன் பின்னர், வெளிநாட்டு கடன்களை மீளசெலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையை தீர்க்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டியதாயிற்று. அதைப் பல நிபுணர்கள் பல முறை சுட்டிக்காட்டியும் அரச தலைவர்களும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் அதற்கு உடன்படவில்லை. உரிய நேரத்துக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அரசாங்கம் அந்த முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு நாட்டை சீரழித்தவர்கள், தாம் மக்களின் ஆணையிலேயே பதவியில் இருக்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? ஆகவே, தேர்தல்களின் போது மக்கள் இந்த ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது. தார்மீக கண்ணோட்டத்தில் பார்த்தால், இப்போது இவர்கள் வெளியேற வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.