அசானி புயல் தாக்கத்தால் விமானங்கள் ரத்து, விசாகப்பட்டினம் துறைமுகம் மூடப்பட்டது..!!
வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாகவும் உருமாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அசானி புயலானது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தென்கிழக்கு 300 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு தென்கிழக்கே 330 கி.மீ தொலைவிலும் கோபால்பூருக்கு தென்மேற்கே 510 கி.மீ தொலைவிலும் இது மையம் கொண்டுள்ளது.
இது ஆந்திரா, ஒடிசா கடல் பகுதியை நோக்கி 105 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு அசானி புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கி ஒடிசா கடலோரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அசானி புயல் காரணமாக வடக்கு கடலோர பகுதிகளான ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விசாகப்பட்டினம் துறைமுகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, விசாகப்பட்டினம் பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக இண்டிகோ நிறுவனம் 23 விமானங்களையும் ஏர் ஏசியா 4 விமானங்களையும் ரத்து செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
அசானி புயலானது 150 கிமீ வேகத்தில் சூறைகாற்றுடன் கிழக்கு கடற்கரையை நெருங்குகிறது என்றும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில் உருவான அசானி புயல் காரணமாக கிழக்கு திசையில் காற்று வீசுவதால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெப்பநிலையில் உயர்வு இருக்காது, என்று தனியார் வானிலை அறிவிப்பாளர் ஸ்கைமெட்டின் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.