மெட்ரோ ரெயிலில் வெட்டிங் போட்டோ ஷூட்- கொச்சி நிர்வாகம் அனுமதி..!!
இரு மனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணமாக அமைகிறது. அப்படிப்பட்ட தருணம் அந்நாளில் மட்டும் இல்லாமல் காலத்திற்கும் நினைவுக்கூரும் மகிழ்ச்சியூட்டும் நினைவுகளாக நமக்கு அமைத்து தருவது புகைப்படங்கள் மட்டுமே.
திருமண நிகழ்வுகளில் தற்போது புகைப்படங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. சமீப காலமாக வெட்டிங் போட்டோஷூட் டிரெண்டாகி வருகிறது. முன்பெல்லாம் திருமணம் அன்று மட்டுமே புகைப்படங்கள் எடுப்பார்கள்.
தற்போது, ப்ரீ வெட்டிங்- போஸ்ட் வெட்டிங் உள்பட பல்வேறு திருமண நிகழ்வுகளையும் படம்பிடிக்கும் வெட்டிங் போட்டோஷூட்டிங் மணமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக லட்சங்களை செலவு செய்யவும் தயங்குவதில்லை.
அப்படி வெட்டிங் போட்டோ ஷூட்டிங்கிற்கு ஆர்வமுள்ள நபர்களுக்காகவே ஒரு புதுமையான போட்டோஷூட் ஸ்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாகம்.
ஆமாம். இனி மெட்ரோ ரெயிலிலும் போட்டோஷூட் செய்யலாம். கொச்சி மெட்ரோவில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன. தற்போது முதன்முறையாக திருமண போட்டோஷூட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒரு மெட்ரோ ரெயில் பெட்டிக்கு அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம். நிற்கும் ரெயிலில் இரண்டு மணி நேரத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும், 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் வேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். இதற்கு வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
ஓடும் ரெயில் வேண்டும் என்றால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெட்டிக்கு ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மேலும், 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் தேவை என்றால் ரூ.17,500 செலுத்த வேண்டும். இந்த ரெயில் சேவை ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும். இதற்கும் ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.