;
Athirady Tamil News

விண்வெளித்துறையில் தனியார் முதலீடுகளால் வேலைவாய்ப்பு பெருகும்- மயில்சாமி அண்ணாதுரை..!!

0

பெங்களூரு:

இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) முன்னாள் இயக்குனரும், விண்வெளி விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி கல்லூரி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறுகிறது. இது மட்டுமின்றி செயற்கைகோள் தயாரிக்கும் கல்லூரிகளிலேயே தரை கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கல்லூரி மாணவர்கள் விண்வெளி குறித்த விஷயங்களை அந்த கட்டுப்பாட்டு மையத்தை பார்த்து அறிந்து கொள்ள முடியும். இதனால் அவர்களுக்கு விண்வெளி சம்பந்தமான தகவல்கள் அருகிலேயே கிடைக்கிறது. இது அந்த மாணவர்கள் விண்வெளி பக்கம் தங்களின் கவனத்தை திருப்ப உதவும்.

இதனால் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைக்கட்டுப்பாட்டு மையங்கள் வரும். இது மாணவர்களுக்கு பெரிதும் உதவும். விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் விண்வெளித்துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும். இந்தியாவில் செயற்கைகோள் தயாரிக்க செலவுகள் குறைவாக ஆகின்றன. அதனால் வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் இங்கு வந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.

மேலும் அதிகளவில் வேலைவாய்ப்புகள் பெருகும். அத்துடன் வர்த்தக ரீதியாக நாட்டிற்கு பெரிய அளவில் பயன் ஏற்படும். அமெரிக்காவில் நாசாவை விட எலான் மஸ்க் நிறுவனம் தான் அதிகளவில் விண்வெளி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டால் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று நினைக்கிறேன்.

அங்கு செயற்கைகோள் ஏவுதளம் மட்டுமின்றி அதே பகுதியில் செயற்கைகோள் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு செயற்கைகோள் ஏவுவதற்கான செலவுகள் குறையும். அமெரிக்காவில் எலான் மஸ்க் இவ்வாறு தான் செய்கிறார். அதாவது அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது செயற்கைகோள் ஏவுதளத்திற்கு குலசேகரப்பட்டினம் சிறந்த இடமாக உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியா, நாசாவை விட எலான் மஸ்க்கை தான் மிரட்டுகிறது. அந்த அளவுக்கு விண்வெளித்துறையில் எலான் மஸ்க் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.