உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் சித்து..!!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவும், அவரது நண்பர் சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தினர்.
இந்த விபத்து தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் 34 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழன் அன்று தீர்ப்பளித்திருந்தது.மேலும் அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தது.
இதையடுத்து இன்று பாட்டியாலா நீதிமன்றத்திற்கு மூத்த வழக்கறிஞர் ஹெச்பிஎஸ் வர்மாவுடன் வந்த சித்து நீதிபதி முன்பு சரண் அடைந்தார். சித்துவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருடன் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
வாரண்டில் கையெழுத்திட்ட அவரை, சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், மாதா கௌசல்யா மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை நிறைவுக்கு பின்னர் காவல்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.