’பரீட்சைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்தவில்லை’ !!
இன்று (23) ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும் மாணவர்கள், பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் எவ்வித தடையுமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பொதுமக்கள் வழங்க வேண்டும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை விடுத்தார்.
2005- 2010 ஆம் ஆண்டு வரை தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றதாகவும் இதன்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரீட்சைகள் அனைத்தும் தடையின்றி நடத்தப்பட்டன என்ற அவர், இதன்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூட எந்தவொரு பரீட்சையையும் நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என்பதையும் நினைவு கூர்ந்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார்.
எனவே மாணவர்களை வாகனங்களில் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்பவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் முன்னரிமை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று இருக்கும் முக்கிய பிரச்சினையான எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதில் பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தீர்ப்பதற்காக நேற்று முன்தினம் (21) முழு நாளும் 9 ஆளுநர்களையும் தொலைபேசி மூலம் தொடர்கொண்டு கலந்துரையாடி, அவர்கள் ஊடாக கல்வித் துறையினரின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கமைய, மாணவர்களின் பரீட்சை அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை, அதிகாரிகளின் பரீட்சை நேர கடமைக்கான கடிதங்களை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் முன்னுரிமையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே நாட்டின் தற்போதைய நிலையில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகிலுள்ள வீதிகளை மறைத்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அது மாணவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.
எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், மனிதாபிமான ரீதியில் விசேடமாக பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை எவ்வித தடையும் இன்றி, பரீட்சைக்கான ஒத்துழைப்பை வழங்குமாறு, ரயில், தனியார் பஸ் சங்கம், இ.போ.ச பஸ் சேவை, எரிபொருள் கூட்டுதாபனம், பொலிஸ், கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.