மீனவர்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார்..!!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95 கோடி வழங்கப்படும்.
இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.