மண்ணெண்ணெய்க்காக அலை மோதும் மக்கள் !!
திருகோணமலையில் மண்ணென்னெயை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் அலைமோதுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சுமார் இரு வாரங்களுக்கும் மேலாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மண்ணெண்ணெய் கிடைக்கப் பெறவில்லை .
திருகோணமலை முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிலையத்தில் நேற்று (26) மக்கள் மண்ணெண்ணெயை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மண்ணெண்ணெய் விநியோகம் இடம் பெற முன்னர் காலை முதல் பல மணி நேரங்கள் வெயிலில் நின்று கொண்டு காத்திருந்த போதே விநியோகம் இடம் பெற்றது .ஒருவருக்கு 500 ரூபாவுக்கே மண்ணெண்ணெய் கொடுக்கப்பட்டது.
மிக நீண்ட வரிசையில் வேகாத சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த போதும் பலர் வெறுங்கையுடன் ஏமாற்றத்துடனே வீடு சென்றதாக தெரிவிக்கின்றனர். பல வீட்டு தாய் மார்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் கருத்துரைத்த தாயொருவர், சமைப்பதற்காக மண்ணெண்ணெயையாவது பெறுவோம் என்று வந்தால் மிக நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்யிருக்கிறது. இதனால் வீட்டில் உள்ள சமையல் வேலைகளை பார்ப்பதா? வரிசையில் நிற்பதா? எனவும், எரிவாயுவை பெறுவதும் சிரமமாக உள்ளது, இதனால் வாழ்வதா? சாவதா? என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தங்கள் பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சை எழுத பாடசாலைக்கு சென்றுள்ளனர் மதியம் வீட்டுக்கு வருவார்கள் அவர்களுக்கு கூட சமைத்து கொடுக்க நேரம் விட்டு வைக்கவிவ்லை தட்டுப்பாடு நிலவுகிறது இது தொடர்பிலாவது கவனம் செலுத்துங்கள் எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் ஒரேயொரு எரிபொருள் நிரப்பு நிலையமாக முள்ளிப்பொத்தானையில் உள்ள நிலையமே உள்ளது. நாளாந்தம் பலர் எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை காணக்கூடியதாகவுள்ளது.