புள் டேங்க் அடித்துக் கொண்டு இலங்கை வருமாறு கோரிக்கை!!!
இலங்கை வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச விமான நிறுவனங்களிடம் கோரியுள்ளார்.
புளூம்பேர்க் செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போது, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது விமான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக இலங்கைக்கான விமானங்களை இயக்கும் போது போதுமான அளவு விமான எரிபொருளுடன் வருமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கான எரிபொருள் நிரப்பும் பணி தற்போது தென்னிந்தியாவில் உள்ள சென்னை விமான நிலையம் மற்றும் துபாய் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதாக புளூம்பேர்க் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியால் எரிபொருள் மற்றும் உணவு உட்பட அனைத்து துறைகளிலும் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், அதன் வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை தனது வெளிநாட்டு கடனை 2022 மே மாதத்தில் திருப்பிச் செலுத்தாமல் இருக்க தீர்மானித்தாகவும் புளூம்பேர்க் செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.