பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையினால் மத்திய மலைநாட்டை அண்டிய பிரதேசங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா, மாத்தளை குருநாகல் மாவட்டங்கள் பலவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது வீட்டிற்கு அருகிலுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து வீட்டு உரிமையாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தில் விரிசல் அல்லது மரங்கள் விழும் நிலை போன்ற ஏதேனும் அவதானிக்கப்பட்டால் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறி, கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற தொலை பேசி ஊடாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதேச அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகரிகளுடன் தொடர்பு கொண்டு பிரதேச பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இவ்வாறான பகுதிகளுக்கு திரும்ப வேண்டும் இது தொடரபாக கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மாவட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர கூறினார்.