இதுதான் தன்னம்பிக்கை- ஒற்றை காலுடன் தினமும் 3 கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்..!!
தற்போதைய நவநாகரீக உலகில் பக்கத்தில் செல்வதற்கு கூட வாகனங்களை தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஒற்றை காலுடன் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
அவரது பெயர் பர்வேஷ் அகமது. காஷ்மீர் குப்வாரா மாவட்டம் மாவர் பகுதியை சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த விபத்தில் இவர் இடதுகாலை இழந்தார். அவரது குடும்பம் வறுமையில் வாடியதால் மருத்துவ ஆபரேஷன் மூலம் செயற்கை கால் பொருத்துவற்கான பண வசதி தந்தையிடம் இல்லை. இருந்த போதிலும் பர்வேஷ் தனது தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
அவருக்கு எதிர்காலத்தில் டாக்டராகி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியம் உள்ளது.
இதனால் அவர் தனது இலக்கை அடைய ஒரு கால் போனாலும் பரவாயில்லை, எப்படியும் தனது கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுக்குள் முடங்கி விடாமல் தினமும் பள்ளிக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஒற்றை காலுடன் நடந்தே செல்கிறார்.
அவருக்கு வீல்சேர் இருந்தாலும் பள்ளிக்கு செல்லும் ரோடு மிகவும் மோசமாக இருப்பதால் நடந்தே செல்ல முடிவு செய்தார். இதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அவர் புத்தக பையை தோளில் சுமந்து கொண்டு ஒரு காலுடன் நடந்தே சென்று வருகிறார். இதற்கு அவருக்கு ஒருமணி நேரம் ஆகிறது. கஷ்டப்பட்டாலும் தனது குறிக்கோளை அடையும் வரை போராடுவேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.
அரசு தனக்கு செயற்கை கால் வழங்கினால் உயர் கல்வி படிக்க வசதியாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். பர்வேஷ் அகமது படிப்பிலும் படுசுட்டியாக திகழ்கிறார். அதே சமயம் கிரிக்கெட் மற்றும் வாலிபால் விளையாட்டிலும் அசத்துகிறார். மாலை வேளைகளில் அவர் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் விளையாட தவறுவது இல்லை. வாலிபால் விளையாட்டில் சிறந்த பயிற்சி பெற்று என் கிராமத்துக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என பர்வேஷ் அகமது நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.