ஜனாதிபதியுடன் தென்னகோன் கலந்துரையாடல் !!
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதன் பின்னரே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதிக்கும் தென்னகோனுக்கும் இடையே 11 நிமிட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும், ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவஹெட்டி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் உள்ள கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்கு நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று முன்தினம் (01) முன்னெடுக்கப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்தார்.
தனது சேவை பெறுநர், காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக சட்டத்தரணி லட்டுவஹெட்டி குறிப்பிட்டார்.
காலி முகத்திடலுக்குள் நுழைந்த தாக்குதல்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து கிடைத்த முரண்பட்ட தொலைபேசி அழைப்புகளை தென்னகோன் பெற்றிருந்தாகவும் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையால் குழப்பமடைந்த தென்னகோன், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த அரசியல் பிரமுகரின் ஆலோசனையைப் பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கும் தென்னகோனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் கிட்டத்தட்ட 11 நிமிடங்கள் நீடித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவஹெட்டி மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
மேலும், கடவுச்சீட்டை ஒப்படைக்காமை குறித்து கருத்து வெளியிட்ட அவர், தமது குறித்து, தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேசபந்து தென்னகோன் தனது கடவுச்சீட்டை ஏற்கெனவே நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இதேவேளை, சட்டமா அதிபரின் பணிப்புரையை புறக்கணித்து, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை, இடமாற்றம் செய்ய பொலிஸ் திணைக்களம் தவறியமைக்கான காரணத்தை விளக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதற்கமைய திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும்பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் அமைச்சின் செயலாளர் ஊடாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.