’தமிழக நிவாரணங்கள் முழு தோட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்’ !!
கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலுக்கு அமைய, தோட்டப் புறங்களில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் பட்டியலில் தோட்டத் தொழிலாளர்கள் எவரும் உள்ளடக்கப்படமாட்டார்கள் என தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், எம்மைப் பொறுத்தவரை தோட்ட முகாமையாளர், உதவி முகாமையாளரைத் தவிர்ந்த தோட்டத்தில் உள்ள 100 சதவீதமானவர்களுக்கும் இந்த நிவாரணம் சென்றடைய வேண்டும் என்றார்.
தமிழக நிவாரணங்கள் விநியாகிக்கும் நடவடிக்கையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அழுத்தம் கொடுப்பதாகவும், யார் யார் வறுமையானவர்கள், யாருக்கு இதனை விநியோகிக்க வேண்டும் என தமக்கு தெரியும் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கும் முகமாக,நேற்று (2) கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
தோட்டத் தொழிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் எவ்வித தொழிலிலும் ஈடுபடாதவர்கள் மாத்திரமே கிராம உத்தியோகத்தர்களின் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பார்க்குமிடத்து ஒரு தோட்டத்தில் 20 சதவீதமானவர்களே இந்த நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என கிராம உத்தியோகத்தர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது ஒரு தோட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதாகும் என்றார்.
கொரோனா காலத்தில் 5,000 ரூபாய் கொடுப்பனவின் போது பல பிரச்சினைகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். எனவே அவ்வாறான நிலையை தவிர்ப்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தோம். குறிப்பாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் . இது அரசாங்கத்தின் சமுர்த்தி வேலைத்திட்டமோ அல்லது அரசாங்கத்தின் வேறு வேலைத்திட்டமோ அல்ல. அவ்வாறான வேலைத்திட்டங்கள் எனின் கிராம உத்தியோகத்தர்கள் கூறும் விடயங்கள் சரிவரும். ஆனால் இது தமிழக அரசாங்கத்தின் நிவாரணம் என்பதால் அனைத்து தோட்ட மக்களையும் சென்றடையும் வேண்டும் என்றார்.
தோட்டத்தில் உள்ள 20- 30 சதவீத மக்களுக்கு நாம் இதனை அனுப்பவில்லை. முழுத் தோட்டங்களுக்கும் இதனை விநியோகிக்கவே பாடுபடுகிறோம். மேலும் முதற்கட்டமாக 9ஆயிரம் தொன் உணவுப்பொருள்களே கிடைத்துள்ளன. மிகுதியான 31ஆயிரம் மெட்றிக் தொன் தமிழகத்திலிருந்து வரவுள்ளது என்றார்.