;
Athirady Tamil News

துரித வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை!!

0

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும். அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும் போது முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு வரலாற்றில் அதிக விலை தற்போது விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜி தர்மகீர்த்தி மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.