அரிசியை பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் திட்டம் என்ன ?
தற்போது கையிருப்பில் உள்ள அரிசி இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்ந்தவிடுமென அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நாட்டின் எதிர்கால தேவைக்கான அரசியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டு ஒருமாத காலமாகின்றது. பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டதும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுக் கிடைக்குமென மக்களால் எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரையில் எதுவும் நடக்கவில்லை என்றார். எரிபொருளுக்கான வரிசைகள் இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் இந்திய கடன் உதவியால் வழங்கப்படும் எரிபொருள் உதவி முடிவடைந்ததும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கப்போகிறது என்கிற எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
வாழ்க்கை செலவை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும் அதனை அரசாங்கம் செய்யவில்லை. வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவகையில் பால்மா, சீமெந்து, காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. பொருள்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்குக்கூட எந்தவிதமான வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் தெரிவித்தார்.