’இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்களுக்கு பயன் கிடைக்கும்’ !!
இந்திய முதலீடுகளால் வட மாகாண மக்கள் பலனை அனுபவிப்பார்கள் என இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் இந்திய மக்களின் நிவாரண பொருட்களை வழங்கி வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணம் கையளிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமான உதவியே. தமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இன்னும் நிவாரணப்பொதிகள் வந்துகொண்டிருக்கின்றது.
அரிசி மற்றும் பால்மா இதன்போது கையளித்துள்ளோம். யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு 17000 லீற்றர் மண்ணெண்னை வழங்கி வைத்திருந்தோம். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துபொருட்கள் மருத்துவ உபகரணங்களும் நேற்று வழங்கி வைத்திருந்தோம். இன்னும் மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் வந்துகொண்டிருக்கின்றது.
இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வருவதற்கு முன்னேக்கி பார்க்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவில் இருந்து முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு சந்தர்ப்பங்களை கொண்டு வரவும் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். மிக விரைவில் இதற்கான பலனை வட மாகாணத்தில் காண்போம் என்கிறார்.