குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி!!
அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பணவீக்கத்தின் காரணமாக அதிகரித்த வழங்கல் செலவீனத்தினை ஈடுசெய்வதற்கான ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறைநிரப்பு மதிப்பீட்டுக்கான 695 பில்லியன் ரூபாவில் 395 பில்லியன் ரூபா மீண்டுவரம் செலவீனங்களுக்கும், 300 பில்லியன் ரூபா மூலதனச் செலவீனமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவினால் குறைநிரப்பு மதிப்பீட்டினால் நிதி ஒதுக்கப்படவுள்ள முறைமை குறித்து குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கமைய 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்னவுத் தொகையாக வழங்கப்படும் 5,000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87,000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5,000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 1,000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 15,000 மில்லியன் ரூபாவும் இந்த மதிப்பீட்டின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எரிசக்தி தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை மின்சார சபைக்கான ஏற்பாடுகளுக்காக 50,000 மில்லியன் ரூபாவும், பசுமை விவசாய உள்ளீட்டுப் பயன்பாட்டின் பெறுமதியினைக் கூட்டுவதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்காக 12,000 மில்லியன் ரூபாவும், உர நிவாரணத்திற்காக மேற்கொள்ளப்படவுள்ள கொடுப்பனவுகளுக்காக 50,000 மில்லியன் ரூபாவும் குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
விலைவாசி அதிகரிப்புக் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்பவற்றிற்கு உணவு மற்றும் இதர பொருட்கள் வழங்கலில் ஏற்படுவதற்குச் சாத்தியமான பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கு 25,000 மில்லியன் ரூபாவும், விலை அதிகரிப்புக் காரணமாகச் செலுத்த வேண்டியுள்ள ஏனைய சாத்தியமான மீண்டெழும் செலவீனங்களுக்கு 4,500 மில்லியன் ரூபாவும், கடன் வட்டிகளைச் செலுத்த 21,500 மில்லியன் ரூபாவும் இதன் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்திய கடன் வரியின் கீழ் பெறப்பட்ட கடன் தொகையின் பயன்பாடு/கணக்கு வைத்தல்களுக்கு 250,000 மில்லியன் ரூபாவும், இக்கட்டான பொருளாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கும், தற்போது அத்தகைய ஏதேனும் நல உதவிகளுக்குத் தகுதி பெற்றுக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள பயனாளிகள் என்போருக்கு அத்தகைய உத்தேச நிவாரனத்தைப் பயன்படுத்துவதற்கு 140,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய உலக வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவி தவிர ஏனைய தொகையான 305,000 மில்லியன் ரூபாவுக்கு உள்நாட்டு நிதியளிப்புக்கான தேவை இருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
695 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளபோதும் அத்தியாவசிய செலவீனங்கள் தவிர ஏனைய சகல செலவீனங்களையும் குறைத்து 300 பில்லியன் ரூபாவுக்கும் மேலதிகமான தொகையை சேமிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். எனவே, எதிர்காலத்தில் இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டமொன்றை முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் சிறிவர்தன குறிப்பிட்டார்.
அதேநேரம், 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழான கட்டளைகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது. 2020ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள முன்கூட்டிய கணக்கு எல்லைகளைத் திருத்துவதற்காக இந்தக் கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, குறைநிரப்பு மதிப்பீடு நாளையதினம் (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.