’9 மாகாணங்களுக்கும் நிதி அதிகாரம் தாருங்கள்’ !!
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதி உதவிகளைப் பெறும் அதிகாரம் 9 மாகாணங்களும் வழங்கப்பட வேண்டும் என சபையில் வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், அந்தந்த மாகாணங்களுக்கு அவர்களே செலவழிக்க கூடிய வகையில் நிதியப்பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாணங்களுக்கு ஏன் அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (7) இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ப்பன விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசின் தொடர்ச்சியான பொருளாதார கொள்கைகளே காரணம். எரிபொருள் தட்டுப்பாடு ,மக்களின் வரிசைகள் மிகவும் ஒரு மோசமான நிலையை அடைந்துள்ளன. நாட்டின் புதிய பிரதமராக ஒருவர் பதவியேற்றும் இந்த வரிசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நெருக்கடி நிலையை புதிய பிரதமர் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போது விவசாயிகள் சிறுபோக விவசாயம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான பசளைகளை எப்போது வழங்குவீர்கள் ?என்ன விலையில் வழங்குவீர்கள் என்ற அந்த தரவையும் புதிய பிரதமர் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை.பட்டினி சாவு வரும், அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுகின்ற பிரதமர் அந்த விவசாயிகளுக்கு பசளைகளை எப்போது கொடுக்க முடியுமென்ற தெளிவான பதிலை வழங்க வேண்டும்.கடற்தொழில் செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்துள்ளார்கள் .
சொந்த நாட்டு மக்களையே அழிக்க வேண்டுமென்ற கங்கணம் கட்டிய இனவாதப்போர்,இதன் அடிப்படையில்தான் நாடு இப்படியான சூழ நிலைக்கு முகம் கொடுத்துள்ளது. 34 வருடங்களுக்கு முன்னர் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரங்கள் அரசியலமைப்பு சபையில் சேர்க்கப்பட்டும் இன்றுவரை 34 வருடங்கள் முடிந்தும் அந்த சட்டங்களை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் தயாரில்லை. இனவாதப்போக்கே அதற்கு காரணம் என்றார்.