வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல் வீடியோ வடிவில்)
வெளிநாடு வாழ் தமிழர்களால், நாசமாகப் போகும் யாழ்ப்பாண இளையோர்.. நடப்பது என்ன?? (தகவல் வீடியோ வடிவில்)
பிரபல டொக்ரர் சிவச்சந்திரன் அவர்களின் “எனது பார்வையில் இன்றைய யாழ். இளையோர் சமுதாயம்” எனும் சமூகவலைத் தள பதிவை.. “அதிரடி” இணையம், வீடியோ வடிவில் கொண்டு வருகின்றது..
§§§§§§§§§§§§§§§§§
அண்மையில் ஒரு 17 வயது கர்ப்பிணிப் பெண்ணைச் சந்தித்தேன். கணவனுக்கு இருபது வயது என்றார்.
கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து விட்டேன்.
அவர் சொன்ன பதில், “லண்டன் போக ட்ரை பண்ணிக் கொண்டிருக்கார்”.
‘லண்டன் மாப்பிள்ளை’ என்ற காலம் போய், “லண்டனுக்குப் போக ட்ரை பண்ணுகிறார்” என்பதே ஒரு வேலையாக உருவெடுத்து விட்டது.
“இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள்? என்றேன்.
“அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க”
அவர் வெளிநாட்டுக்குப் போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார்.
கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக் கிடைக்கிறது.
ஒரு இருபது வயது ஆண்;
“வாழ்க்கை பற்றி எந்தக் கவலையுமில்லாமல், ஒரு 17 வயதுப் பெண்ணைக் கர்ப்பமாக்கி விட்டு, வீட்டிலே சும்மா இருந்து கொண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் குடும்பம் நடத்துமளவுக்கு நம் இளைஞர் சமூகம் வந்துள்ளது.
இதற்கான மிக முக்கிய காரணம் நம் புலம்பெயர் அதாவது வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள் விடுகின்ற தவறு தான்.
நீங்கள் விடுகின்ற முதல் தவறு, வெளிநாட்டிலே நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் பணத்தை உழைக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் விடுவது தான்.
வெளிநாட்டுக்குப் போனா ஈசியா உழைக்கலாம் . அல்லது அகதிக் காசே சும்மா இருக்க பல லட்சம் வரும் என்ற மாயையிலே நம்முடைய இளம் சமூதாயம் உழைப்பின் வலிமை தெரியாமல் உருவாகி விட்டது.
நீங்களும் சொந்தங்கள் பாவம் என்று கேட்டதும் அனுப்புகின்ற பணம் அவர்களின் சோம்பேறித்தனத்தை இன்னும் அதிகரித்து விடுகின்றது.
இங்கே அதாவது யாழில் உழைப்பதற்கு வழிகளில்லாமல் இல்லை.
நான் அடிக்கடி பயணம் செல்லும் ஒரு ஆட்டோக்கார ஐயா இருக்கிறார். 60 வயதுக்கும் மேல் இருக்கும். அவரிடம் ஒருநாள் “உங்கள் வருமானம் எவ்வளவு ஐயா? என்றேன்.
“மாதம் 60 ஆயிரம் வரும் பெற்றோல் செலவு போக 45 ஆயிரம் மிஞ்சும்” என்றார்.
“45 ஆயிரம் குடும்பம் நடத்தப் போதுமா ஐயா? என்றேன். “இது சும்மா பார்ட் டைம் (Part time) வேலை தான் ஐயா! மெயினா(Main) நான் விவசாயம் தான் செய்கிறனான்” என்றார்.
ஒரு 60 வயது தாண்டியவர் பார்ட் டைம் ஆட்டோ ஓட்டியே மாதம் 45 ஆயிரம் உழைக்கும் போது, (இது ஒரு பட்டதாரி ஆசிரியரை விட அதிகமான சம்பளம்) ஒரு 20 வயது அப்பாவாகப் போகும் இளைஞன் முழுநேரமாக ஆட்டோ ஓட்டினால் எவ்வளவு உழைக்கலாம்?
பருத்தித்துறையிலே ஒரு ‘கடலை வடை’ செய்து விற்கும் தள்ளுவண்டியை பருத்தித்துறை பஸ் நிறுத்தத்திற்கு அண்மையில் காணலாம்.
புத்தளத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவும் மகனும் இங்கே தங்கியிருந்து இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். பின்னேரத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். மாதம் எப்படியும் லட்சமாவது உழைப்பார்கள்.
புத்தளத்தில் இருந்து ஒரு அப்பாவும் மகனும் இங்கே வந்து தங்கியிருந்து, இங்கேயே இவ்வளவு உழைக்கும் போது, இங்கே இருக்கும் ஒரு 20 வயது இளைஞனை ஓசிச்சோறு சாப்பிட வைத்தது எது?
“எங்கட குடும்பம் ஆட்டோ ஓடுறதா? சுண்டல் விற்கிறதா? என்ற வெத்துக் கெளரவம் தான் இதற்குக் காரணமாகிறது.
20 வயதில வேலை வெட்டி இல்லாமல் ஓசி சோறு சாப்பிட்டுக் கொண்டு கல்யாணம் முடிக்கும் ஒருவன், லண்டன் வந்து எக்கவுன்டன் வேலை பார்க்கப் போறதில்லை. மேலே சொன்ன வேலைகள் போல ஒன்றைத் தான் செய்யப் போகிறான்.
அவன் லண்டன் வரும்வரையாவது( இப்போது திருட்டுத்தனமாக லண்டன் போவது அவ்வளவு ஈசியா என்று தெரியவில்லை) அவனுக்கு சும்மா காசு அனுப்பாமல், ஒரு 3 லட்சம் அனுப்பி, “ஆட்டோ ஓடிக் குடும்பம் நடத்து, இனிக் காசு அனுப்ப மாட்டோம்” என்றால் அவனும் உழைக்கக் கற்றுக் கொள்வான். அவன் லண்டன் வந்தாலும் உழைத்து நல்ல நிலைக்கு வர உதவும்.
👉👉👉முக்கிய குறிப்பு: இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னால் எழுதப் பட்ட பதிவாக இருக்கலாம் ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது அல்லவா?
எழுத்துப் பதிவு டொக்ரர் சிவச்சந்திரன்.. வீடியோ வடிவமைப்பு அதிரடி இணைய வீடியோக் குழுவினர்..