’வன்முறை சக்தியொன்று தோற்றம் பெற்றுள்ளது’ !!
பொருளாதர நெருக்கடி மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. ஆனாலும், மக்களின் கோபத்தை வன்முறையாக மாற்றிவிடும் சக்தியொன்று நாட்டில் தோற்றம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல தொடர்பான அனுதாப பிரேரணை மீது பாராளுமன்றில் நேற்று (10) நடைபெற்ற விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் 30 வருடங்களாக மரண பயத்துடனேயே எம்.பிக்கள் வீதிகளில் சென்றனர். 2009 மே 19 ஆம் திகதிக்குப் பின்னர் பயங்கரவாதம் அற்ற நாடாக்கி மக்கள் அச்சமின்றி வீதிகளில் செல்லும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்த பாராளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றனர்.
மக்களிடையே பொருளாதார நெருக்கடியால் வேதனை மற்றும் அதிருப்தி நிலைமை உருவாகியுள்ளது என்பது உண்மையே ஆனால் அது கொலை, வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் வரையில் செல்வதற்கு இதற்கு பின்னால் இருந்து சிலர் செயற்படுவதனாலேயே ஆகும். மக்களிடையே இவ்வாறு வன்முறைகளை கொண்டு செல்லும் அரசியல் சக்திகள் இப்போது உருவாகியுள்ளன.
ஜனநாயக ரீதியில் இருக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்ட கொலையே இது. அன்று போராட்டக் களத்தில் இருந்த மதத் தலைவர்கள் கூட இந்த கொலைகளை தடுக்க முயற்சிக்கவில்லை. அதனை கண்டிக்கவும் இல்லை. இதனை கூறுவதற்கும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் என்றார்.