சம்பள நிலுவையை நன்கொடை வழங்கிய DR. ஷாபி ஷிஹாப்தீன்!!
குருநாகல் போதனா வைத்தியசாலை கடமையாற்றிய மகப்பேற்றியல் நிபுணரான டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், தனக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவையான 26 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளார்.
அவருடைய சம்பள நிலுவையை கடந்த வெள்ளிக்கிழமைக்கு (10) முன்னர் வழங்குவதாக சுகதார அமைச்சு ஒப்புக் கொண்டிருந்த நிலையில், 9ஆம் திகதியன்று நிலுவைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையையே நன்கொடையாக வழங்குவதற்கு டொக்டர் ஷாபி தீர்மானித்துள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியபோது, பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சட்டவிரோதமான முறையில் பணத்தை சேர்த்தாகவும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அவர் மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இதுவரை நிரூபிக்கவில்லை என்று 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் குருநாகல் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தமைக்கு அமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனக்கு வழங்க வேண்டிய சம்பளம் நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
தன்னிச்சையாகவும் சட்ட விரோதமாகவும் நியாயமான காரணமின்றி, தனது வேலையிலிருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.