மன்னாரில் பெற்றோல் பதுக்கல் !!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று காலை பெற்றோல் கையிருப்பில் காணப்பட்ட போதும், அவை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நீண்ட நாட்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல் இருப்பதாக தெரிவித்து மக்கள் சென்றுள்ளனர்.
எனினும் அங்கு பெற்றோல் வழங்கப்படவில்லை.
எதற்காக பெற்றோலை வைத்துக் கொண்டு இல்லை என்கிறீர்கள்? என மக்கள் கேட்ட போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோலை விநியோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அங்கு கடமையாற்றிய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.