;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தேர்வு ஆலோசனை- மம்தா பானர்ஜி அழைப்பை 3 கட்சிகள் புறக்கணித்தன..!!

0

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் விவரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முதலில் இதற்கான முயற்சியை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அவர் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். இதனால் காங்கிரஸ் அல்லாத ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்காக இன்று (புதன்கிழமை) டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி உள்ளார். 22 கட்சிகளுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். முதலில் அவரது முயற்சிக்கு காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் மம்தா மேற்கொண்ட திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் இன்று பிற்பகல் டெல்லியில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை களம் இறக்க முதலில் முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டார். அவரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சமரசம் செய்து வருகின்றன. இதற்கிடையே மம்தா பானர்ஜி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அதை காங்கிரஸ், இடது சாரிகட்சிகளின் தலைவர்கள் திட்டவட்டமாக ஏற்க மறுத்து விட்டனர். இதற்கிடையே மேற்கு வங்காள முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். அவர் யோசித்து பதில் சொல்வதாக கூறி உள்ளார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றொரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவை ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறி உள்ளார். ஆனால் பரூக் அப்துல்லாவும் பொது வேட்பாளராக களம் இறங்க தயங்குகிறார். இதுபற்றி எல்லாம் எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெயராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோரில் 2 பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2-ம் நிலை தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, சிவசேனா சார்பில் சுபாஸ்தேசாய், ராஷ்டீரிய லோக்தளம் சார்பில் ஜெயம்சவுத்ரி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகாபூபா ஆகியோர் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளனர். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் முதல்-மந்திரியுமான ஹேமந்த்சோரனும் கலந்து கொள்ள உள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் மம்தா ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. அதுபோல ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.

காங்கிரஸ் கட்சியும் மம்தா கூட்டத்தை புறக்கணித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், பொது வேட்பாளருக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி உள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்துக்கு இறுதி வடிவம் கிடைக்காத நிலை இப்போதே உருவாகி உள்ளது. பா.ஜ.க. நிறுத்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆதரித்தால் கூட போதும், பா.ஜ.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.