;
Athirady Tamil News

அழிவின் பிடியில் சமணர் கோவில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா..!!

0

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இந்த ஊர் பண்டைய வட கொங்கின் 20 நாட்டு பிரிவுகளில் ஒன்றான வட பரிசார நாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள அமணீசர் கோவில் என அழைக்கப்படும் சமணர் கோவிலில் திருப்பூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.

கல்வெட்டுகளின் மூலம் இந்த ஊர் பண்டைய வணிகர்கள் செல்லும் பெருவழியில் உள்ளதால் சமணர்கள் இங்கு குடியேறி 1,100 ஆண்டுகளுக்கு முன் வீரசங்காத பெரும்பள்ளி அணியாதழிகியார் என்ற இந்த சமணர் கோவிலை கட்டியுள்ளனர் .

இந்த கோவில் தான் தற்போது அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது . பல சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கி.பி. 10 – ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள் மூன்றும் , கி.பி. 13 , 14 – ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன . இங்கு உள்ள தமிழ் கல்வெட்டு 14- ம் நூற்றாண்டை சேர்ந்த போசள மன்னன் வீரவல்லாளன் காலத்தை சேர்ந்தது . இது மிக முக்கியமானது ஆகும் . இதன் மூலம் அரசு வருவாய் நிர்வாகத்தை அறிந்து கொள்வதற்கும் , நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கும் சிறப்பை வெளிப்படுத் துவதற்கான சிறந்த சான்றாக உள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நம்முடைய பண்டைய நிர்வாகத்தையும், பெண்களுக்கு சம பங்கு கொடுத்தமையையும் பற்றி பேசும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகள் உடைய அமணீசர் கோவில் கருவறை முற்றிலும் சிதிலம் அடைந்துள்ளது. முன் மண்டபமும் பராமரிப்பு இன்றி சிதிலமாகி கற்கட்டுமானங்கள் பெயர்ந்து மொத்தமாக கீழே விழும் நிலையில் உள்ளது.மேலும் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் மீது ஏராளமான பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன.

இக்கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் வளர்ந்து உள்ளூர் மக்களே கூட உள்ளே செல்ல முடியாத அளவு புதர் மண்டி கிடக்கிறது. அனைத்து கல் வெட்டுகளும் தற்போதும் கோவில் சுவர்களில் காணக் கிடைக்கிறது.அவை பாதுகாப்பற்ற நிலையில் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது.மதுரை ஜெயின் வரலாற்று மையம் சார்பில் அறிவிப்பு பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ள நிலையில்,வழிபாட்டு தலம் அமைந்துள்ள பகுதி ஏதோ ஒரு குறுங்காடுபோல் அமைந்துள்ளது.

சமண சமயத்திற்கும் , தமிழ் மண்ணுக்கும் 2,500 ஆண்டுகளாக வரலாற்றியல் பண்பாடு சார்ந்த உறவும் , தொடர்பும் நீடிப்பதால், அழிவின் பிடியில் உள்ள இந்த கோவிலை தமிழக அரசு மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என்று ஆலத்தூர் கிராமத்தில் வாழும் பொதுமக்களும் , சமண சமூகத்தினரும் தொல்லியல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.