;
Athirady Tamil News

யாழில் பங்கீட்டு அட்டைக்கே பெட்ரோல்!! (படங்கள்)

0

யாழ். மாவட்ட மக்களுக்கு பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.

அவையாவன ,

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தினமும் காலை இரவு என இரண்டு தடவைகள் நேரடியாக சேகரிக்கப்படும். இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார்.

பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணங்கியுள்ளது.

வாகனங்களுக்கான பங்கீட்டு அட்டை முறை ஜூலை 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் பொறிமுறை உருவாக்கப்படும்.

அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

சுகாதார சேவையினருக்கான எரிபொருள் விநியோகத்துக்கு தனியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு பிரதேச செயலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள ப.நோ.கூ.ச எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளை வழங்குமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ். மாவட்ட செயலர் க. மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், பிரதேச செயலாளர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.