கேரளாவில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய சுண்டன் படகு போட்டி..!!
கேரளாவில் ஓடும் ஆறுகளில் படகு போட்டி நடைபெறுவது வழக்கம். பல்வேறு அமைப்புகள் சார்பில் படகு போட்டி நடத்தப்பட்டாலும், குட்டநாட்டில் நடைபெறும் செம்பக்குளம் மூலம் படகு போட்டியே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில்140 அடி நீள பாம்பு வடிவிலான சுண்டன் படகுகள் பங்கேற்கும். ஒவ்வொரு படகிலும் துடுப்பு போட 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் இருப்பார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.இதற்காக வீரர்கள் பல மாதங்கள் பயிற்சி எடுப்பார்கள். படகை இயக்கும் வீரர்களை உற்சாகப்படுத்த வஞ்சி பாட்டு பாடப்படும். இதனை கேட்கவும், போட்டியை ரசிக்கவும், கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த படகு போட்டி பல சினிமா படங்களிலும் காட்சி படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த போட்டியை காண கேரளாவில் கூட்டம் அலைமோதும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சினை காரணமாக இந்த போட்டி நடைபெறவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கேரள மக்களின் பாரம்பரிய சுண்டன் படகு போட்டியை நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து போட்டி அமைப்பாளர்கள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். மேலும் வருகிற 12-ந் தேதி போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் 9 படகுகள் பங்கேற்கின்றன. போட்டியை உற்சாகத்துடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக மூலம் படகு போட்டி குழுவினர் தெரிவித்தனர்.