பா.ஜனதா மேலிடம் திடீர் அழைப்பு: பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்..!!
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால் மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களை நிரப்ப வேண்டும் என்று மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக, மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பலமுறை டெல்லி சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்யவோ, மாற்றியமைக்கவோ பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தல், கர்நாடக மேல்-சபை தேர்தலை காரணம் காட்டி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து கர்நாடக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 20-ந்தேதி பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் மைசூருவில் நடந்த சர்வதேச யோகா தினவிழாவிலும் பிரதமர் கலந்து கொண்டார். இதையடுத்து, கர்நாடக பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்திருந்தனர். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகம் வந்து சென்றிருப்பதால், பா.ஜனதாவில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்ற மறுநாளே(அதாவது நேற்று) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை டெல்லிக்கு உடனடியாக வரும்படி பா.ஜனதா மேலிட தலைவர்கள் திடீர் அழைப்பு விடுத்துள்ளனர். பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(வியாழக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பது குறித்து ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பலமுறை மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பலமுறை டெல்லிக்கு சென்று வந்திருந்தாலும், அதற்கான அனுமதியை பா.ஜனதா மேலிடம் வழங்கவில்லை. தற்போது மேலிட தலைவர்களே அழைப்பு விடுத்திருப்பதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலும், இந்த முறை மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மந்திரிசபையை மாற்றியமைக்கப்பட்டால் மூத்த மந்திரிகள், அடிக்கடி சர்ச்சை மற்றும் பிற முறைகேடுகளில் சிக்கியவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதா மேலிட தலைவர்களுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடத்தும் ஆலோசனையை மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.