5 நடமாடும் கால்நடை மருத்துவமனை: மத்திய மந்திரியிடம் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்தர் சிங் தோமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக ரூ.3 கோடிக்கு அனுப்பியுள்ள திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்து நிதியை விடுவிக்க வேண்டும். ஆத்மா திட்டத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கவில்லை. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவற்றை நிறைவேற்றுவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபாலாவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, புதுவைக்கு நடமாடும் மருத்துவமனை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், 4 பிராந்தியமாக உள்ளதால், புதுவைக்கு 2, மற்ற பிராந்தியங்களுக்கு தலா ஒரு நடமாடும் கால்நடை மருத்துவமனை வழங்க வேண்டும். கால்நடை மருத்துவ உதவிக்காக 2 கால் சென்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வழங்கவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்காக புதுவைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 கோடியே 44 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய கால்நடை இயக்கத்தில் 200 மேம்படுத்தப்பட்ட கால்நடைகளை வளர்க்க வழங்கப்படும் ரூ.2 கோடியை, 50 மாடுகளுக்கு என மாற்றி நிதி வழங்க வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தேனீ. ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இந்த சந்திப்புகளின் போது புதுவை வேளாண் துறை செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் உடனிருந்தனர்.